ஜி.கே.மூப்பனார்

திரு.கோவிந்தசாமி கருப்பையா மூப்பனார் அவர்கள்(19 ஆகஸ்ட் 1931 - 30 ஆகஸ்ட் 2001) இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கொடை வள்ளல் ஆகியச் சிறப்பியல்புகளைப் பெற்றவர். அவர் 1980 முதல் 1988 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும் திகழ்ந்தார். திரு.மூப்பனார் அவர்கள் காங்கிரஸ் தலைவரும், தமிழக முதல்வருமாயிருந்த பெருந்தலைவர் காமராஜ் அவர்களுடன் இணைந்து செயலாற்றிய பெருமை பெற்றவர்.

இளமை காலம்

திரு.மூப்பனார் அவர்கள், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கபிஸ்தலம் என்னும் கிராமத்தில் 1931, ஆகஸ்ட், 31ம் தேதி பிறந்தார். அவர் பரந்த வளமான வயல்களைச் சொந்தமாகக் கொண்ட நிலச்சுவான்தார‌ர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தையார் திரு.கோவிந்தசாமி அவர்கள் ஒரு காங்கிரஸ்காரர். அவருடைய குடும்பம் இசை, கலை, இலக்கியம் போன்ற நுண்கலைகளை ஆதரித்து வளர்த்த பெருமை வாய்ந்தது. திரு.மூப்பனார் அவர்களும் 1980ம் ஆண்டிலிருந்து தன் இறுதி மூச்சு வரை திருவையாறு ஸ்ரீ தியாக பிரம்ம மஹோத்ஸவ சபையின் தலைவர் பதவியை வகித்தார். இந்த சபை ஒவ்வொரு ஆண்டும் இசை மும்மூர்த்திகளில் முதல்வரான ஸ்ரீ தியாகராஜரின் அவதார ஸ்தலமான திருவையாற்றில் ஸ்ரீ தியாகராஜர் இசை விழாவை நடத்தி வருகிறது.

அரசியல் வாழ்க்கை

திரு.மூப்பனார் அவர்கள் பெருந்தலைவர் காமராஜ் அவர்களையும், திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களையும் முதன் முதலில் சந்தித்தது 1951ம் ஆண்டு கும்பகோணம் அருகிலுள்ள சுந்தர பாண்டிபுரத்திலுள்ள தன் வீட்டில் தன்னுடைய தந்தை திரு.கோவிந்தசாமி மூப்பனார் அவர்களை அவர்கள் இருவரும் சந்திக்க வந்தபோதுதான். திரு.காமராஜ் அவர்கள் அப்பொழுது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். திரு.மூப்பனார் அவர்கள் 1965ம் ஆண்டு தஞ்சையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகப் பதவி ஏற்றார். 1969ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்ட போது, திரு, மூப்பனார் அவர்கள், திரு.காமராஜ் அவர்களுடனே தம் அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். 1975ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதியன்று, திரு.காமராஜ் அவர்கள் மறைந்த பின், 1976ம் ஆண்டு தமிழ்நாட்டில், காங்கிரஸ் கட்சியின், இரு பிரிவுகளும் இணைந்தன. திருமதி.இந்திரா காந்தி அவர்கள், திரு.மூப்பனார் அவர்களை, இணைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அறிவித்தார்.

அந்த சமயத்திலிருந்தே, காங்கிரஸ் கட்சியில், திரு.மூப்பனார் அவர்களின் உயர்வு விரைந்து காணப்பட்டது. அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை, 1976 முதல் 1980 வரையும், மீண்டும் 1988 முதல் 1989 வரையும் வகித்தார். திரு.மூப்பனார் அவர்கள் 1980லிருந்து 1988 வரை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பலம் பொருந்திய பொதுச் செயலாளராக விளங்கினார். 1996ம் ஆண்டு திரு.மூப்பனார் அவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.க.) என்னும் புதிய கட்சியை நிறுவினார். அவர் தன் வாழ்வின் இறுதி நாட்களில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வகித்து வந்தார். 2001ம் ஆண்டு, அவர் இறந்த பின், அவர் மகன் திரு.ஜி.கே.வாசன் அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். திருமதி. இந்திரா காந்தி அவர்களும், திரு. ராஜீவ் காந்தி அவர்களும், திரு.மூப்பனார் அவர்களுக்கு அமைச்சர் பதவியை அளிக்க முன்வந்தும், அவர் அதை மறுத்து கட்சிப் பணியைத் தொடர்ந்தார்.

ஏப்ரல் 1997ல் திரு.எச்.டி.தேவே கௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசின் வீழ்ச்சிக்குப் பின், தனக்கு அளிக்கப் பட்ட பிரதம மந்திரி வாய்ப்பையும் திரு.மூப்பனார் அவர்கள் மறுத்தார். ஒரு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரால் 2000ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட 'மக்கள் தலைவர் மூப்பனார்' என்ற புத்தகத்தில், முன்னாள் உள்துறை அமைச்சர் திரு. தனுஷ்கோடி ஆதித்தன் அவர்கள், சி.பி.ஐ.(எம்) பொதுச் செயலாளர் திரு.ஹர்கிஷன் சிங் சுர்ஜித் அவர்கள் "பிரதம மந்திரி பதவிக்கு திரு.மூப்பனார் அவர்களே சிறந்த முதல் தேர்வு" எனக் குறிப்பிட்டுள்ளதை நினைவு கூர்ந்துள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் திரு. ஜோதிபாசு அவர்கள் வழி மொழிந்தும், திரு.மூப்பனார் அவர்கள் தனக்குக் கொடுக்கப் பட்ட வாய்ப்பை மறுத்தார்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்